Cover story of the Dinamani Sunday supplement

So I was the cover story of this Sunday’s Dinamani supplement ‘Sunday Kondattam’! I’ve copy-pasted it here. You can also read it here. 🙂

கற்றது கையளவு!
First Published : 15 Apr 2012 12:00:00 AM IST
 மிகச் சிறந்த எழுத்தாளர்களாக இருப்பவர்கள் சிலருக்கு மேடையில் ஏறினால் பேச்சே வராது. மேடைக்கூச்சம் அவர்களின் வாயைக் கட்டிப்போட்டுவிடும். மிகமிக நன்றாகப் பாடக்கூடிய பாடகர்கள், சுமாராகக் கூட மேடையில் பேசுவதற்குத் தயங்குவார்கள். மிக நன்றாக மேடையில் பல தலைப்புகளில் பேசுபவர்களுக்கு ஒரு வரி பாட்டைப் பாடுவதற்குள் வியர்த்துவிடும்.

நிவேதிதா நாராயணனுக்கு இவை மூன்றுமே கைவசமாகியிருக்கிறது. இளம் கர்நாடக இசைப் பாடகியாக, இசை குறித்த நூல்களை எழுதுபவராக, பொதிகை தொலைக்காட்சியில் ஏறக்குறைய மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் “புதுப்புனல்’ நிகழ்ச்சி தொகுப்பாளராக பல பரிமாணங்கள். நிவேதிதாவை அவரது இல்லத்தில் சந்தித்தோம். புதுப்புனலாய் ஊற்றெடுத்த அவரின் பேச்சிலிருந்து…

 “”அடையாறிலிருக்கும் ரத்னகிரீஸ்வரர் கோயிலில் என்னுடைய இசை நிகழ்ச்சி 2008-ஆம் ஆண்டில் நடந்தது. அதைப் பார்த்த என்னுடைய குடும்ப நண்பர் வேணுகோபால், “சென்னைத் தொலைக்காட்சி நிலையத்தில் கர்நாடக இசைக் கலைஞர்களைக் குறித்த ஓர் இசை நிகழ்ச்சியைத் தொடங்க இருப்பதாகவும் அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்கு ஒரு புதுமுகத்தைத் தேடிக் கொண்டிருக்கின்றனர். நீங்கள் போய் பாருங்கள்…’ என்று தொலைக்காட்சியில் பணிபுரியும் அவரின் நண்பருக்கு என்னை அறிமுகப்படுத்தினார்.

 நானும் “ஆடிஷன்’ எனப்படும் குரல் தேர்வுக்குப் போனேன். என்னுடைய குரல் அவர்களுக்குப் பிடித்திருந்தது. என்னுடைய நிகழ்ச்சிக்கான எழுத்துவடிவத்தை (ஸ்கிரிப்டை) நானே தயாரித்துக் கொள்ளவும் அனுமதித்தார்கள்.

 கர்நாடக இசையிலும் நம்முடைய பாரம்பரிய கலை வடிவங்களிலும் ஈடுபட்டிருக்கும் இளம் தலைமுறையைச் சேர்ந்த கலைஞர்களை ஊக்குவிப்பதுதான் அந்த நிகழ்ச்சியின் நோக்கம்.

 நானும் ஓர் இளம் தலைமுறையைச் சேர்ந்த பாடகி என்ற அடிப்படையில் எவ்வளவு இளம் கலைஞராக இருந்தாலும் அவர் பற்றிய விவரங்களையும் தகவல்களையும் சம்பவங்களையும் அவரிடமே பேசித் தெரிந்துகொண்டு, நிகழ்ச்சியில் அவர்களைப் பேசவைப்பேன்.

 கீ-போர்ட் சத்யநாராயணா, பரத்சுந்தர், பாகேஸ்வரி என்னும் நாகசுரக் கலைஞர், ஆடிஸம் பாதித்த ஒரு மாற்றுத் திறனாளி, வில்லுப்பாட்டுக் கலைஞர், ஃபியூஷன் இசைக் கலைஞர்கள் இப்படி பலதரப்பட்டவர்களையும் புதுப்புனல் நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தியிருக்கிறோம். ஒவ்வொரு கலைஞரிடமும் பேசும்போதும் எனக்கும் அவரிடமிருந்து நிறைய கருத்துக்கள் கிடைக்கும். இந்த நிகழ்ச்சிக்கு உள்நாட்டில் மட்டுமல்ல வெளிநாட்டிலும் பல ரசிகர்கள் இருக்கிறார்கள்.

 என்னுடைய இசை நிகழ்ச்சி நடக்கும் இடங்களில் பலரும், “”புதுப்புனல்’ நிகழ்ச்சியில் நீங்கள் பேசுவதைத்தான் கேட்டிருக்கிறோம். நீங்களும் பாடவும் செய்வீர்களா?” என்று வியப்புடன் கேட்பார்கள். புதன்கிழமைதோறும் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் “புதுப்புனல்’ நிகழ்ச்சியின் வெற்றியைத் தொடர்ந்து சனிக்கிழமைதோறும் “நம் விருந்தினர்’ தலைப்பில் பிரபல கர்நாடக இசைக் கலைஞர்களின் அனுபவங்களை ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்ளும் நிகழ்ச்சியைத் தொகுத்தளிக்கும் வாய்ப்பு வந்தது.

 இந்த நிகழ்ச்சி நடத்துவதை எனக்குக் கிடைத்த பாக்கியமாக நினைக்கிறேன். இந்த நிகழ்ச்சியில் என்னுடைய சங்கீத குருக்கள் சசிகிரண், கணேஷ், ஜெ. வைத்யநாதன், சேஷம்பட்டி சிவலிங்கம், கிளீவ்லேண்ட் சுந்தரம், டாக்டர் நர்மதா போன்ற பலரின் பேட்டிகள் இடம்பெற்றிருக்கின்றன. இசைக்கு அவர்களின் சேவைகள், இசையை அடுத்த தலைமுறைக்கு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கொண்டு செல்லும் நேர்த்தி இப்படிப் பல செய்திகளை ரசிகர்கள் இந்த நிகழ்ச்சியின் மூலம் தெரிந்துகொள்வார்கள். இவர்களின் திறமைகளைப் பார்க்கும் போது, “நாம் கற்றது கையளவு’ என்பதை உணர்வேன்.

 சங்கரா தொலைக்காட்சியில் “மைத்ரிம்பஜத’ என்னும் நிகழ்ச்சியில் கர்நாடக இசையை எப்படி அணுகவேண்டும் என்பதை விளக்குகிறோம். சங்ககாலம் முதல் இன்று வரை கர்நாடக இசை எப்படி வளர்ந்து வந்திருக்கிறது. என்னென்ன மாற்றங்கள் வந்திருக்கின்றன என்பதை இந்த நிகழ்ச்சி விவரிக்கும்.

 இந்த நிகழ்ச்சிகளின் வெற்றியைப் பார்த்து தனியார் தொலைக்காட்சிகள் பலவற்றிலிருந்தும் திரை இசைப் பாடல்களை தொகுத்தளிக்கும் நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக என்னைக் கூப்பிட்டனர். “தெரியாத விஷயங்களில் ஈடுபடக்கூடாது’ என்னும் தெளிவு எனக்கு உண்டு. அதனால் அன்போடு அந்த வாய்ப்புகளை மறுத்துவிடுவேன்.

 கர்நாடக இசையை தேசிய அளவில் பிரபலப்படுத்தும் ஒரு நிகழ்ச்சியை தூர்தர்ஷன் தயாரிக்க இருக்கிறது. இந்த நிகழ்ச்சிக்காக கர்நாடக இசை குறித்த “ஸ்கிரிப்டை’ ஹிந்தியில் எழுதிக் கொண்டிருக்கிறேன்.

 எளிய முறையில் கர்நாடக இசையை அறிமுகப்படுத்தும் புத்தகத்தை நான் எழுதியிருக்கிறேன். இதை ராம்நாராயணனின் “வோர்ட் கிராஃப்ட்’ பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

 “சங்கீத லிபி’ என்னும் பெயரில் சங்கீதக் குறியீடுகளைப் எழுதிப் பயிற்சி செய்யும் புத்தகத்தையும் “கர்னாடிக் ஃபன்டாஸ்டிக்’ என்னும் புத்தகத்தையும் என்னுடைய குரு “கர்னாடிகா’ சகோதரர்களுடன் இணைந்து எழுதியிருக்கிறேன். இதை கர்நாடிகா பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

 “ஆக்ஸ்போர்ட் யூனிவர்சிட்டி பிரஸ்’ஸில் இந்திய கிளைக்கான பொறியியல் மற்றும் நிர்வாகவியல் துறைகளுக்கான திட்ட ஆசிரியராக கடந்த இரண்டு ஆண்டுகளாகப் பணியிலிருக்கிறேன். இப்போதைக்கு அவ்வளவுதான்…” என்கிறார் கணவர் அஜயைப் பார்த்தபடி!